September 11, 2008

தமிழ் பண்பாடு

அன்று வகுப்பில் தமிழ் திரைபடங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை என்று ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் ஒரிரு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் பதிவு செய்த எனது கருதுகள்: ஏன் தமிழ் திரைபடங்கள் வெள்ளையனிடம் ஆங்கிகாரம் பெற வேண்டும் என விரும்புகிறீர்கள். இந்த எண்ணம் நம் எண்ணங்கள் இன்னும் வெள்ளையனிடம் அடிமைபெற்றிருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு. இது நம் மாண்பிற்கு எதிரானது. தமிழன் என்றும் கலையில் மற்றவர்களுக்குக் குறைந்தவனல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு பண்பாடு உள்ளது. எனவே நம் திரைப்படங்கள் பல வேளைகளில் பிறரால் புரிந்திட இயலாமல் போகும். அதற்காக அது தரமான படைப்பு இல்லை என்று சொல்ல இயலாது. உடனே, என்னுடைய நண்பன் தமிழ் பண்பாடு என்றால் என்ன என்று வினவினான்.
நம் பண்பாடு என்னவென்று கூட இவர்களுக்கு தெரியவில்லை என்றால் எப்படி நம் நாட்டின் பெருமையையும் நம் மொழியின் பெருமையையும் உணர முடியும் என்று எனக்குள் ஒரு அங்கலாய்ப்பு. நம் பண்பாட்டை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது ?
பண்பாடு என்பது ஒரு இனதின் வாழ்க்கை முறை. அது அந்த இனத்தின் மனசாட்சி. தன் பண்பாட்டோடு வாழும் பொழுது தான் அந்த இனம் வளருகிறது. பண்பாட்டை இழந்த இனம், உயிரில்லாத பிணமே. நம் பண்பாடு என்னவென்றே நாம் அறியவில்லை என்றால், நாம் எப்படி மாண்புள்ளவர்களாக இருக்க முடியும்.

இல்வாழ்க்கையில் இணைந்தது முதல் உலகை விட்டு பிரியும் வரை ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே தமிழினம் உலகுக்குக் கற்றுத் தந்த பண்பாடு.
அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என்று எல்லா உறவுகளுக்கும் மதிப்பளித்து உறவுகளைப் போற்றி அன்பு பாராட்டுவதே, தமிழ் மண்ணின் பண்பாடு.
உலகமே மிருகங்களாய் காடுகளில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, மொழியை எப்படி பேச வேண்டும், வாழ்வினை எப்படி வாழ வேண்டும் என்று இலக்கணம் எழுதிய அகத்தியனும் தொல்காப்பியனும் கொடுத்தது தமிழ் பண்பாடு.
பல ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகும் ஒரு இனத்தின் வாழ்க்கை முறையினை இரண்டடிக்குள் அடக்கிய வள்ளுவன் கொடுத்தது தமிழ் பண்பாடு.

தீமை செய்தவரையும், நன்மை செய்வதால் வெல்லச் சொன்னது திருக்குறள் கூறும் உயர் பண்பாடு.
நாடாளும் தன்னை விட தமிழாளும் கிழவியே நெடு நாள் வாழ வேண்டுமென தான் பெற்ற கிடைப்பதற்கறிய நெல்லிக் கனியை ஒளவைக்கு அளித்த அதியமான் நமக்கு தந்தது தமிழ் பண்பாடு.
சாதி இரண்டொழிய வேறில்லையென்று சாதியில்லாத சமுதாயத்தை சொல்லி, அந்த இரண்டு சாதியும் ஆண் பெண்ணில்லை, உதவும் மனமுடையவர் உதவ மனமில்லாதவர் என்ற இரண்டு சாதிகளே என்று உதவுகின்ற மனதினையும், ஆண் பெண் சமத்துவத்தை வலியுருத்திய ஒளவை வாழ்ந்தது தமிழ் பண்பாடு.
கடவுளே ஆனாலும் குற்றம் குற்றமே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதியை உரைத்த நக்கீரன் தந்தது தமிழ் பண்பாடு.
வாழ்வின் பாதையை நம்மை விட சிறியவர்களும் கற்றுத்தருவார்கள், அவர்களையும் நான் மாண்புடன் மதிக்க வேண்டும் என்று தகப்பன் சாமியாய் முருக பெருமானை காட்டிய வாழ்வு தமிழ் பண்பாடு.
பகைவரானாலும் அறியாதார் எவரானாலும் மகிழ்வுடன் விருந்தோம்பி அவர்களை மகிழ்விப்பது, மாண்பு நிறைந்த தமிழ் பண்பாடு.
யாதும் ஊரே யாவரும் கேளீர் யென உலகத்தார் யாவரையும் சகோதரனாய் காட்டியது இணையில்லா உயர்ந்த தமிழ் பண்பாடு.
அரசாளும் தன்னையே ஏகார மொழியில் பேசிட புலவர்களுக்கும், கலைஞர்களுக்கும் உரிமையளித்து அவர்களுக்கு மதிப்பளித்து கலைக்கு மாண்பு சேர்த்தது, தேன் தமிழினத்தின் பண்பாடு.
தன் நாடு வழியே செல்லும் பயணிகள் கூட மகிழ்ந்து இளைப்பார மண்டபம் கட்டிய சோழன் தந்தது, உயர்ந்த நம் பண்பாடு.
நாட்டின் நலமும், மக்களின் நலமும், வீட்டின் நலமுமே தனது மகிழ்வு என்று வாழ்ந்த பிசிராந்தையர் காட்டியது உயர்ந்த தமிழ் பண்பாடு.
தனது மானசீக நண்பன் போரில் கண்ட தோல்வியால் வடக்கிருந்து இறந்ததை அறிந்து தானும் வடக்கிருந்து இறந்து தன் நட்புக்கு பெறுமை சேர்த்த பிசிராந்தையார் வாழ்ந்தது நமது பண்பாடு...
தவறு செய்த அரசனை எதிர்த்து வாதாடிய கண்ணகியும் முறத்தால் புலியை விரட்டிய காவிய பெண்ணும் வாழ்ந்து காட்டியது வீர தமிழ் பண்பாடு.
தன் நாட்டுக்காக போரிட தன் தந்தை, கணவன், ஆறு வயது மகன் என யாவரையும் அனுப்பி வீரம் காத்த சங்க தமிழ் பெண் வாழ்ந்தது வீரத்தமிழ் பண்பாடு.
பெண்களை தம் கண்களாக போற்றிக்காத்தது தெய்வத் தமிழ் பண்பாடு.
மனம் கொண்ட காதலிக்காக எதனையும் செய்யும் வீரமும், சொந்த நாட்டிற்காய் தன் உயிரையும் துச்சமெனப் போற்றும் மறவர் வாழ்ந்தது தூய தமிழ் பண்பாடு.
எதிரி நாட்டுச் சிறையில் மானமிழந்ததை சகியாமல், உயிரை துறந்த மன்னன் பிறந்தது வீர தமிழ் பண்பாட்டில்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடின் அனைவருக்கும் தாழ்வு என இணைந்து வாழ்வதே இனிய தமிழ் பண்பாடு.
கன்றினை இழந்த பசுவின் துயரை உணர்ந்திட தன் மகனை இழந்த மனுநீதி சோழன் தந்தது நல்ல தமிழ் பண்பாடு.
படர்ந்திட வழியின்றி தெருவில் கிடந்த முல்லைக்கு தன் தேரினை தந்த பாரியிடம் கண்டது பண்பு நிறை தமிழ் பண்பாடு.
வாடிய பயிரை கண்டு வாடியது நமது தமிழ் பண்பாடு.
அறத்தினை காத்த மானுடம் போற்றும் இணையில்லா பண்பாட்டினை நெஞ்சில் நிறைத்து வாழ்ந்து காட்டவதே, தமிழ் அன்னையின் மைந்தர்கள் யாவருக்கும் பெறுமை தரும் நேறி.
தமிழ் மணம் போற்றுவோம்........
தமிழராய் வாழுவோம்............
Post a Comment

Ratings